kantara 2 rishab shetty escapes boat accident

ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கந்தாரா தி லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் கர்நாடகாவில் நடந்து வந்ததாக கூறப்படும் நிலையில் அதில் ஜூனியர் ஆர்டிஸ்ட் கபில் என்பவர் படப்பிடிப்புக்கு இடைவெளியில் சவுபர்னிகா நதியில் குளிக்க சென்ற போது நீரில் சிக்கி உயிரிழந்தார். பின்பு படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி கடந்த மாதம் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். படப்பிடிப்புக்காக வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜூ வி.கே., விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு படப்பிடிப்பு முடிந்து ஜூனியர் ஆர்டிஸ்டுகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அதில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இப்படி தொடர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள் விபத்தில் சிக்கியும் உயிரிழந்தும் வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு விபத்து படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்டுள்ளது.

Advertisment

கர்நாடகா சிவமோகா மாவட்டத்தில் மணி நீர்த்தேக்கம் பகுதியில் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி உட்பட படக்குழுவினர் 30க்கும் மேற்பட்டவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நீர்த்தேக்கத்தின் ஆழமற்ற பகுதியில் படகு கவிழ்ந்ததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் கேமராக்கள் மற்றும் பிற படப்பிடிப்பு உபகரணங்கள் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்த விபத்து பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் படகில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.