மு
கேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படக்குழுவினர் உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தினை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படம் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ஜூன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படக்குழு, முக்கியமான சீன்கள் அடங்கிய ஹார்ட் ட்ரைவ் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கண்ணப்பா படத்தில், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான நடக்கும் ஒரு சண்டை காட்சி அடங்கிய ஹார்ட் டிரைவ் ஒன்று போக்குவரத்தின் போது திருடப்பட்டது. அதில் சண்டை காட்சியுடன் வி.எஃப்.எக்ஸ். பணிகளும் இருந்தது. இந்த டிரைவ் மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டுடியோஸிலிருந்து அனுப்பப்பட்டு, எங்கள் தயாரிப்பு அலுவலகத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக, சரிதா மற்றும் ரகு என்ற நபர்களால் ஹார்ட் ட்ரைவ் திருடப்பட்டுள்ளது. இது குறித்து கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு முன்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். மேலும் இதன் பின்னணியில் இருப்பவர்களை பற்றி விளக்கமாக போலிஸிடம் விளக்கியுள்ளோம். இது ஒரு புறம் இருக்க அந்த நபர்கள், கண்ணப்பா பட வெளியீட்டை சிதைக்கும் நோக்கில் படத்தில் இருந்து 90 நிமிடங்களுக்கும் அதிகமான இதுவரை வெளியிடப்படாத காட்சிகளை ஆன்லைனில் கசிய திட்டம் தீட்டியுள்ளதாக சமீபத்தில் நம்பகமான உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிர்வாக தயாரிப்பாளர், இந்த விஷயத்தை சைபர் கிரைம் அதிகாரிகளிடம் முறையாகவும் விரைவாகவும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
இந்த செயல் வருத்தமளிக்கிறது. தெலுங்கு சினிமா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வரும் நேரத்தில், இதுபோன்ற நிலைகளுக்குச் செல்வது பின்வாங்குவது மட்டுமல்ல - அவமானகரமானது. இந்த கோழைத்தனமான செயல்களால் நாங்கள் உடைந்துவிடமாட்டோம். நீதியை நாங்கள் நம்புகிறோம். ஒரு வேளை திருட்டுத்தனமாக படத்தின் காட்சிகள் வெளியானால் அதை யாரும் பகிர வேண்டாம். இந்த படத்தில்
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பல வருட உழைப்பு இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.