kannada film industry request to make committee against womens unsafety

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் எதிரொலியாக தெலுங்கு திரையுலகிலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் அம்மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதை தொடர்ந்து தமிழ் சினிமாலும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக உருவான SIAA-GSICC கமிட்டியிடம் நடிகர் சங்கம் கலந்தாலோசித்து 7 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் கன்னட திரையுலகிலும் ஹேமா கமிட்டி போல் ஒரு கமிட்டி உருவாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘ஃபயர்’ அமைப்பு, சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் கடிதம் கொடுத்துள்ளது.