kanguva release ban issue

Advertisment

ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா டெடி-2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதில், 45 கோடியை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா மீதமுள்ள 55 கோடி ரூபாயை செலுத்தாமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தொகையைத் திருப்பி தராமல் தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று(08.10.2024) விசாரணைக்கு வந்த போது, ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில், டூடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் ரூ. 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஆட்சேபமில்லை என தெரிவித்தது. இதையடுத்து ஸ்டூடியோ கிரீன் தரப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய மீதித் தொகையை இன்றைக்குள் செலுத்துவதாக உறுதியளித்த நிலையில் வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அதன் படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் தரப்பு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய மீதித் தொகையை செலுத்தி விட்டதாக தெரிவித்தது. இதையடுத்து கங்குவா படத்தை வெளியிடத் தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.