kanguva film release issue case

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால் கங்குவா படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டூடியோ கிரீன் தரப்பில் பாக்கித் தொகையை நாளை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.