kangana ranaut speech about election

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. பிரச்சாரத்தையும் தீவிரப் படுத்தியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இமாச்சலபிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்இன்று பா.ஜ.க கட்சி நிர்வாகிகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடினார். பின்பு பேட்டியளித்த அவர், “இமாச்சலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோரும் எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியால் தான் இன்று நமக்கு இந்த பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இமாச்சல் மற்றும் மண்டி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். நான் அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்களுடன் சேர்ந்து நடப்பேன், வெற்றி பெறுவேன். அதற்கு நாங்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வோம். உலகில் அதிகம் விரும்பப்படும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்தான் எங்களின் நிகழ்ச்சி நிரல். எங்களது பெயராலும், உழைப்பாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்பவில்லை, ஆனால் பிரதமர் மோடி செய்த பணியால் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

Advertisment

கட்சி வெற்றிபெற்றால், நானும் வெற்றிபெறுவேன். பிரதமர் மோடி இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நாங்களும் வெற்றிபெறுவோம். நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்லது நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டேன். நான் கட்சியின் உத்தரவை பின்பற்றக்கூடிய ஒரு சாதாரண தொண்டர்” என்றார்.