இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களில் தொடர் கனமழையும், மேகவெடிப்பும் மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அம்மாநிலம் முழுவதும் பெரும் சேதமடைந்தது. இதன் பாதிப்பால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் மணாலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அத்தொகுதியின் எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் நேரில் சென்று பார்வையிட்டார். ஏற்கனவே அவர் ஏன் இதுவரை வரவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. அவர் அங்கு சென்ற போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸின் இளைஞர் அமைப்பு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியது. மக்களும் ‘வெளியே போ கங்கனா’ எனக் கோஷம் எழுப்பியதால் அங்கு மக்களுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு மக்களை சந்தித்த கங்கனா, தன் நிலையை புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவர் பேசியதாவது, “என்னுடைய வீடு மணாலியில் இருக்கிறது. என்னுடைய ஹோட்டலும் இங்கு தான் இருக்கிறது. நேற்று என் ஹோட்டலில் வெறும் 50 ரூபாய்க்கு தான் வியாபரம் நடந்துள்ளது. ஆனால் நான் 15 லட்ச ரூபாய் மாத சம்பளம் கொடுக்க வேண்டும். அதனால் என்னுடைய நிலமையை யோசித்து பாருங்கள். நானும் தனியாக வாழும் ஒரு பெண் தான். அதனுடைய அவநிலையையும் புரிந்து கொள்ளுங்கள்.
என்னை இங்கிலாந்து ராணியாக நினைக்காதீர்கள். நான் என் சொந்த உழைப்பால் சம்பாதித்து வாழ்கிறேன். நான் ஒரு எம்.பி. மட்டுமல்ல, நான் மணாலியின் மகள். இது எனது அரசியல் பொறுப்பு மட்டுமல்ல, இது தனிப்பட்ட பொறுப்பு. நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது” என்றார்.