முடிவுக்கு வந்த பிரச்சனை - மகிழ்ச்சியில் கங்கனா ரனாவத்

kangana ranaut emergency movie censor problem solved

பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. சென்சார் சான்றிதழ் வாங்க பிரச்சனை நீடித்து வந்ததால் புதிய ரிலீஸ் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

இப்படத்தின் ட்ரைலர் முன்னதாக வெளியான நிலையில் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இப்படம் இருப்பதாக கூறி சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தையும் தணிக்கை குழுவினரையும் அணுகினர். மேலும் சண்டிகரில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் ரவீந்தர் சிங் பாஸி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர், சீக்கிய சமூகத்துக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாகவும் சீக்கியர்களின் மதிப்பை கங்கனா கெடுக்க முயன்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதாகக் கூறி பல காட்சிகளை நீக்க உத்தரவிட்டது. இதையடுத்து சென்சார் சான்றிதழ் தரக்கோரி படக்குழு சார்பில் இணைத் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் சீக்கியர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்பாக 13 மாற்றங்கள் செய்தால் யு/ஏ சான்றிதழ் கொடுக்க தயாராக இருப்பதாக சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

emergency Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Subscribe