/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_23.jpg)
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்கள் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம்கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஊரடங்கின்போதே இந்தியாவில் ஓடிடி பயன்பாடு கணிசமான அளவில் அதிகரித்தது. சில முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாகும். இன்றளவும் சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் படத்தினை வெளியிடுவதை பாதுகாப்பான தேர்வாகக் கருதுகின்றனர். நேரடியாக ஓடிடி தளங்களுக்காக படம் உருவாக்கும் போக்கும் தற்போது அதிகரித்துவருகிறது. அந்த வகையில், நடிகை கங்கனா ரணாவத் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் மூலம் ஓடிடி தளத்தினுள் கால் பதிக்கிறார்.
மணிகர்னிகா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய லோகோவை வெளியிட்ட கங்கனா ரணாவத், இது குறித்து கூறுகையில், "‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ படத்தின் மூலம் மணிகர்னிகா ஃபிலிம்ஸ் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது. இப்படம் நகைச்சுவை கலந்த காதல் கதை. டிஜிட்டல் தளத்தில் இன்னும் சிறப்பான மற்றும் தரமான படைப்புகளை நாங்கள் வழங்கவுள்ளோம். புதிய கலைஞர்களை அறிமுகம் செய்து, புதிய கதைகளை துணிச்சலுடன் தேர்ந்தெடுக்கவுள்ளோம். சராசரி சினிமா பார்வையாளர்களை விட டிஜிட்டல் பார்வையாளர்கள் சற்று பரிணாமம் அடைந்திருந்திருப்பதாகக் கருதுகிறோம்" எனக் குறிப்பிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)