“திரைத்துறையை விட்டு வெளியேற முடியாது” - கங்கனா ரணாவத்

kangana ranaut compare himself to amitabh bachan and his film carrier

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் நடைபெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு நடக்கிறது.

இதையடுத்து நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும், ஏழாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. ஜூன் 4 வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத், சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் பிரச்சாரத்தின் போது அவர் பேசியது சில சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில், “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” எனக் கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாக தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் அமிபதாப் பச்சனுடன் தன்னை ஒப்பிட்டும், சினிமாவிலிருந்து தான் விலக முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் குறித்து ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியது, “நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான்! ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான்! இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்றார்.

இதையடுத்து சினிமா குறித்து ஒரு பேட்டியில் பேசியது, “என்னுடைய பல படங்கள் பாதியில் நிற்கிறது. அதனால் என்னால் இப்போது திரைத்துறையை விட்டு வெளியேற முடியாது” என்றார். கங்கனா ரணாவத், எமெர்ஜென்சி என்ற தலைப்பில் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்திஆட்சிக்காலத்தில் அமல்படுத்திய எமெர்ஜென்சி காலகட்டத்தை கொண்டு இயக்கி நடித்துள்ளார். இப்படம் ஜுன் 14 வெளியாகிறது. மேலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவனோடு இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில்தேர்தலுக்கு பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்பில் கங்கனா கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

amitabh bachchan Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Subscribe