கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 11 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களை குஜராத் அரசாங்கம், சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
மேலும் அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது, பெரும் சர்ச்சையானது. இதனைத்தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வந்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, பில்கிஸ் பானு வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க கங்கனா ரணாவத்திற்கு ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், கங்கனாவை டேக் செய்து பதிவிட்ட அந்த நபர், “பெண்கள் அதிகாரமடைவது பற்றிய உங்கள் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. அதனால் பில்கிஸ் பானு வாழ்கையை ஒரு அழுத்தமான திரைப்படமாக எடுக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?. இதை பில்கிஸ்பாவிற்காவோ, பெண்ணியத்திற்காகவோ அல்லது குறைந்த பட்சம் மனிதநேயத்திற்காகவாவது செய்வீர்களா” என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கங்கனா, “இந்தக் கதையை உருவாக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து மூன்று வருடம் உழைத்து, ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், அரசியல் ரீதியான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என வரையறைவைத்துள்ளோம் என பதிலளித்துவிட்டனர். மேலும் ஜியோ சினிமாஸ், நான் பிஜேபியை ஆதரிப்பதாக கூறி என்னுடன் பணிபுரிய மாட்டோம் என கூறினர். ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.