Advertisment

கமல் எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம் 

Kamal Haasan

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாக தற்போதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. மேலும், பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் பெருந்தொற்றுப் பரவலும் அதனையடுத்து வந்த லாக்டவுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும், பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். கோவிட் பெருந்தொற்று என்னையும் தாக்கியபோது, மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்தேன். குணமடைந்த மறுநாளே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். பிக்பாஸ் சீசன் 5 வழக்கம்போல சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

Advertisment

இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு.

லாக்டவுண் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும், கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் என் சொந்தக் காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆகவே, வேறு வழியின்றி கனத்த மனதுடன் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி எபிஸோட்டுக்குப் பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த முடிவை எடுப்பதில் விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம் மிகச்சிறந்த முறையில் என்னோடு ஒத்துழைத்தார்கள். இந்த இக்கட்டான தருணத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் எனக்களிக்கும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சியடையச் செய்கின்றன. என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக அவர்களிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6இல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த திடீர் அறிவிப்பு பிக்பாஸ் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் கமல் ஹாசனின் இந்த முடிவை அவரது திரை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

bigboss actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe