தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழில் கமலை வைத்து 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காம ராஜன்', 'காதலா காதலா' என காலத்தால் அழியாத படங்களையும் கொடுத்துள்ளார். மேலும் 'சின்ன வாத்தியார்', 'லிட்டில் ஜான்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குவதையும்தாண்டி கதையாசிரியராகவும் தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பன்முகத் திறமை கொண்டகலைஞராக இருக்கும் சீனிவாச ராவ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.அவருக்குத்திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், "மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் சிங்கிதம் சீநிவாசராவ்காரு.
அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீநிவாசராவுக்கு என் மனமகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.