kamalhassan thanked tamilnadu in thug life press meet

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நாளை(05.06.2025) வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோட் செய்யும் பணிகளில் கடந்த சில வாரங்களாக படு பிஸியாக இருக்கின்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின. மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்கமுடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை. காவல் துறையில் புகார் கொடுப்பது, தக் லைஃப் படத்தை தடை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதனால் படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடந்த கடைசி விசாரணையில் கமல் தரப்பு, தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை ஒத்திவைப்பதாகவும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு வருகின்ற 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் தக் லைஃப் படக்குழு சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது கமல் பேசுகையில், “எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி. நான் மேடையில் பேசும் போது உயிரே உறவே தமிழே என்று சொன்னதுக்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என்றார். பின்பு மொழி சர்ச்சையை குறித்து பேசும் வகையில், “தக் லைஃப் படத்தை தாண்டி பேச வேண்டியது நிறைய இருக்கிறது. கண்டிப்பாக அதைப் பற்றி பேசுவோம். அதற்கு நேரத்தை ஒதுக்கி தருவது ஒரு தமிழனாக எனது கடமை” என்றார்.