/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/300_59.jpg)
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கமல், சினிமாவை தாண்டி மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருவதால் வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணிகளில் பிஸியாகவுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/301_38.jpg)
இதனிடையே பழம்பெரும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவுக்கு விழா எடுத்துள்ளார் கமல்ஹாசன். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இண்டர்நேஷ்னல் சார்பாக ‘அபூர்வ சிங்கீதம்’ என்ற தலைப்பில் திரைப்படவிழாவை தொடங்கி, இருவரது கூட்டணியில் வெளியான படங்கள் அடுத்தடுத்து திரையிடப்படவுள்ளன. சென்னை அடையாறில் உள்ள NFDC-ல் வருகின்ற 18ஆம் தேதி பேசும் படம், 19ஆம் தேதி அபூர்வ சகோதரர்கள், 20ஆம் தேதி மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. தொடக்க விழாவில், ராஜபார்வை படம் திரையிடப்பட்டு சிங்கிதம் சீனிவாச ராவ், கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு படம் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இப்படம் கமலின் 100வது படமாகும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழில் கமலை வைத்து 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காம ராஜன்', 'காதலா காதலா' என காலத்தால் அழியாத படங்களையும் கொடுத்துள்ளார். மேலும் 'சின்ன வாத்தியார்', 'லிட்டில் ஜான்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குவதையும் தாண்டி கதையாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு தற்போது வயது 92.
கடந்த ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவின் பிறந்தநாளான செப்டம்பர் 21ஆம் தேதி கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் சிங்கிதம் சீனிவாசராவ்காரு. அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீநிவாசராவ்” என குறிப்பிட்டுவாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)