
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி உருவாகிறது.

முன்னதாக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் கதை கமல்ஹாசன் எழுதியது எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதன் பிறகு இப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தத் தகவல் தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்திற்கு இயக்குநர் மகேஷ் நாராயணன் அளித்துள்ள பேட்டியில், "நானும் கமல் சாரும் இணையும் படம் கைவிடப்படவில்லை. கமல் சார் தற்போது வேறு படங்களில் பிஸியாக உள்ளார். அப்படங்களை முடித்த பின்னர் தொடங்குவோம்" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் கமல், மகேஷ் நாராயணன் படம் சற்று தாமதமாக உருவாகும் எனத் தெரிகிறது. இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.