/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/471_9.jpg)
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. ‘பரவா பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாக்கியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இப்படம் உண்மை சம்பவத்தைத்தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் தொடர்பான ஒரு யூட்யூப் பேட்டியில், கமலுடைய தீவிர ரசிகர் என இயக்குநர் சிதம்பரம் தெரிவித்திருந்தார். மேலும், “இந்தப் படம் மூலம் கமல் சாரை சந்திக்க நேர்ந்தால் சந்தோஷம்” என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை கமல்ஹாசன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களுடன் படம் பார்த்து படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இவர்களுடன் குணா பட இயக்குநர் மற்றும் பிரபல நடிகருமான சந்தான பாரதி உடன் இருந்தார்.
சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான படம் குணா. ரோஷினி, ஜனகராஜ், எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சுவாதி சித்ரா இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்திருந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள குகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு குணா குகை என ரசிகர்களால் அழைக்கப்பட்டு அக்குகைக்கு அதுவே பெயராக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)