/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kamal_3.jpg)
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல்ஹாசன் பேசியதாவது “எளிமை, நட்பு, உழைப்பு,பெருந்தன்மை போன்ற இத்தனை வார்த்தைகளையும் சேர்த்து ஒரு மனிதனுக்கு சொல்லலாம் என்றால், அது சகோதரர் விஜயகாந்திற்குத்தான் பொருந்தும். நட்சத்திர அந்தஸ்து வருவதற்குமுன்பு எப்படி நடந்து கொண்டாரோ, அதே போலத்தான் இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து அடைந்த பிறகும் நடந்து கொண்டார். எந்த அளவிற்கு பணிவு இருக்குமோ, அந்த அளவிற்கு நியாயமான கோவமும் இருக்கும்,அந்த கோவத்தின் ரசிகன் நான். அதனால் தான் மக்கள் பணிக்கே வந்தார். இப்படியான நேர்மையாளர்களை இழந்திருப்பதே ஒரு வகை தனிமை தான். நல்ல நண்பனுக்கு விடை கொடுத்துவிட்டு செல்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)