kamalhassan about odisha train accident

Advertisment

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும்,ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது.

Advertisment

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் அல்லு அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் தங்களது ஆறுதல்களைப் பதிவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.