Skip to main content

"சினிமாவின் ஆர்வலர் என்பதே மனோபாலாவின் முதன்மை அடையாளம்" - கமல்ஹாசன்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

kamalhassan about manobala

 

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.

 

இந்த சூழலில் இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், "இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

தேமுதிக தலைவர், "எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "காலத்தால் அழியாத கலைப் படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மாண்ட பட்ஜெட் -  ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள் 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்மையில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால் இப்படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. 

kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜுன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படம், கல்கி  2898 ஏடி வெளியாகவுள்ள அதே மாதத்தில் வெளியாகவுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 மற்றும்  கல்கி 2898 ஏடி இரு படங்களும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.