ADVERTISEMENT

“இளையராஜாவை சுருக்கி விட்டார்கள்” - கமல்ஹாசன் ஆதங்கம்

05:35 PM Oct 10, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘ஓ பெண்ணே..’ என்ற ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவரே பாடியும், நடித்தும் இருக்கிறார். இப்பாடல் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பாடலை வெளியிட்டார்.

அதன் பிறகு பேசிய கமல்ஹாசன், “தேவி ஸ்ரீ பிரசாத் பல வெற்றிகளை கொடுத்த பிறகும், அதை எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், சின்ன பையன் போல ஒவ்வொரு முறையும் புதிது போல செயல்பட்டு வருகிறார். எம்.எஸ்.வியை சந்தித்து வந்த பிறகு சந்தோஷமாக, பதட்டமில்லாமல் இருக்கும். அதேபோன்று, இளையராஜாவை பார்க்க சென்றால் சத்தமாக பேசலாமா, வேண்டாமா என்று பயமாக இருக்கும். ஆனால் அவர் கொடுக்கும் இசைக்கு நாம் பேசாம இருந்து, கொடுக்கும் இசையை வாங்கி கொண்டு வந்தாலும் சந்தோஷமாகதான் இருக்கும்.

இவர் எப்படியோ, அப்படித்தான் நானும் இளையராஜாவுக்கும் மிகப்பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பார்த்தால், அது அவருடைய ஸ்டுடியோவா இல்லை இளையராஜாவின் ஸ்டுடியோவா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் பெரிய புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார். அப்படி நல்ல கலைஞர்களை பார்த்து காதல், மோகம் எல்லாம் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உண்டு. அதை வெளிப்படுத்துவது தான் எங்கள் கடமை. அவருக்கு வெற்றி விரைவாக வந்திருக்க வேண்டும். எனக்கு என்னவோ தாமதமாக வந்திருக்கிறது என்று நீண்ட காலமாகவே ஒரு கோபம் இருகிறது. ஏனென்றால் ‘தசாவதாரம்’ படத்தில் இவரின் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும்.

தேவி ஸ்ரீபிரசாத் எடுத்துள்ள இந்த முயற்சி எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் சினிமாவை விட இசை ஆல்பம் பாடல்(தனிப்பாடல்) தான் பிரபலமாகி இருந்தன. ஆனால் சினிமா வந்த பிறகு அது அனைத்தையும் விழுங்கி விட்டது. அதன் பிறகு படத்தின் கதை என்னவோ, அதற்கு மட்டுமே படம் எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளார்கள். இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அப்படி ஒரு சூழ்நிலையில் சினிமாவில் அமையவில்லை என வருத்தமாக இருக்கிறது. இளையராஜா மாதிரி பெரிய கலைஞர் கூட சிறிய சதுரத்தில் சுருக்கி விட்டார்கள். அதையும் தாண்டி வெளியே சென்று இசையமைத்தால் வேண்டாம், எங்களுக்கு புரியவில்லை என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்காக இசை கலைஞர்கள் குனிந்து நிற்கிறார்கள். அதை எல்லாம் களைந்துவிட்டு, அவர்களை அவர்களின் போக்கில் விட வேண்டும்.

இன்றைக்கு அமெரிக்காவில் பார்த்தீர்கள் என்றால் சினிமா நட்சத்திரங்களை விட இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் எனது மகள் சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது, உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா, அதனால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவில் இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று சொல்லி இசையை கற்க அனுப்பி வைத்தேன். சினிமாவை போல, இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT