2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக-வோடு ஏற்பட்ட உடன்படிக்கையில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் கடந்த மாதம் புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்கனவே போடப்பட்ட உடன்படிக்கையின் படி கமல்ஹாசன் போட்டியிட்டு, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் போட்டியின்றி தேர்வானார்.
இந்த நிலையில் வருகின்ற 25ஆம் தேதி புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடங்குகிறது. அதனால் அன்றைய தினம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு கமல்ஹாசன் பதவியேற்கவுள்ளார். இதனால் கமல் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த சூழலில் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளது தொடர்பாக ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்துடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பயணத்தை நண்பர் @rajinikanth உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன். pic.twitter.com/n9R4HgsxlC
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2025