இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வரும் 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை(14.08.2025) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் தங்களது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி, “சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.
இப்படத்தை இயக்கிய பவர்ஹவுஸ் லோகேஷ் கனகராஜ், அவருக்கு அதரவாக நமது துறையின் தூணான கலாநிதி மாறன், புதுமையான அனிருத்தின் இசை, எனது நீண்டகால நண்பர்கள் சத்யராஜ், நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் ஆகியோர் இந்த படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். என் செல்ல மகள் ஸ்ருதிகாசனுக்கு சிறப்பு வாழ்த்து. தொடர்ந்து பிரகாசிக்கட்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கூலி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகிறது. ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தையொட்டி இப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/13/83-2025-08-13-15-22-19.jpg)