தமிழ் திரையுலகில் முக்கிய ஆளுமைகளாக திகழும் இசையமைப்பாளர் இளையராஜா(82) மற்றும் இயக்குநர் மணிரத்னம்(69) இன்று பிறந்தநாள் காண்கின்றனர். இதனையொட்டி ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இளையராஜாவுக்கும் மணிரத்னத்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலில் மணிரத்னத்துக்கு வாழ்த்து கூறி பதிவிட்ட கமல், “நாயகன் முதல் தக் லைஃப் வரை, இருவரும் சக ஊழியர்களாக, குடும்ப உறவுகளாக, கனவு காணும் சக மனிதராக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சினிமாவின் வாழ்நாள் மாணவர்களாக ஒன்றாக காலத்தைக் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாயத்திலும், மணிரத்னத்தின் இருப்பு பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது. உ
உங்கள் கதைகள் தொடர்ந்து வெளிவர வேண்டும். ஏனென்றால் உங்களது ஒவ்வொரு ஃபிரேமிலும் சினிமா மீதான் உங்களது ஆழமான பார்வையும் அதன் அழகும் மற்றும் அர்த்தமும் வெளிப்படுகிறது. என்றென்றும் உங்கள் நண்பர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களது கூட்டணியில் வரும் 5ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இளையராஜாவிற்கு வாழ்த்து கூறிய பதிவில், “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். கமல் குறிப்பிட்ட இந்த பாடல் அவர்கள் கூட்டணியில் வெளியான விருமாண்டி படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அது சூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.