kamal wishes alphonse puthren

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கோல்டு படத்தை தொடர்ந்து 'கிஃப்ட்' என்ற தலைப்பில் இளையராஜா இசையில் ஒரு படம் இயக்கி வந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராகுல் தயாரித்து வந்த இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக தெரிவித்து சினிமா தியேட்டர் கரியரை நிறுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என பெரும்பாலும் ஓடிடிக்கு ஏற்றவாறு இயக்குவதாக கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.

Advertisment

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கடந்த கமல்ஹாசன் பிறந்த நாளுக்காக ஒரு பாடலை பாடி பதிவு செய்துள்ளதாகவும், அதை தன்னிடம் கொடுத்து கமலிடம் கொண்டு சேர்க்க சொன்னதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் “பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்….கேட்கும் மாத்திரத்தில் புரியாது… புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன். அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை.

Advertisment

ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி ‘எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன், நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?’ அவருக்குதவ கமல் சாரை அணுகினேன். படங்கள், சொந்த பட வேலைகள், பிக் பாஸ், அரசியல் பணிகள், இப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும், தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை மனப்பூர்வமாக பகிர்ந்தேன். உடல்நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால்வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் கமல் அல்போன்ஸ் புத்திரனுக்காக பேசிய ஆடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடியோவில், “அல்போன்ஸ் புத்திரனுடைய பாட்டு கேட்டேன். அவர் உடம்பு சுகம் இல்லைனு சொன்னீங்க. ஆனால் மனசு நல்லா இருக்கிற மாதிரி இருக்கு. குரலும் சந்தோஷமாக இருக்கு. அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும் வாழ்த்துகள். அவர் எடுக்கிற முடிவு அவருடையது என்றாலும் உடம்ப நல்லா பார்த்துக்க சொல்லுங்க” என பேசியுள்ளார்.