/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/238_12.jpg)
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ. வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
'கல்கி 2898 ஏடி' படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியான நிலையில், அதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் கமல். இதையடுத்து அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கு ஆஸ்கர் வென்ற மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோருடன் சந்திப்பு மேற்கொண்டார். இது குறித்து நெகிழ்ச்சியாக ஒரு பதிவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவர் கமலின் 'அவ்வை சண்முகி', 'ஹே ராம்', 'தசாவதாரம்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இந்தியன் 2விலும் பணியாற்றுகிறார். மேலும்,இந்தியன் 2 பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ஷங்கர். படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளை அங்கு மேற்கொண்டு வருகிறார்.
இதனைத்தொடர்ந்து கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தைப் பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் ஒன்றில் காட்ஃபாதர் படத்தை இருவரும் கண்டு ரசிக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைத்தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், என்றென்றும் சிறந்த நடிகரான கமல்ஹாசன், என்றென்றும் சிறந்த படமான காட்ஃபாதர் படத்தைப் பார்க்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)