Advertisment

கடந்து வந்த பாதை... வருங்கால முன்னெடுப்பு... - கலைஞர் வசனம் பேசி விவரித்த கமல்

kamal speech in thug life audio launch

Advertisment

நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் கமல், படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பற்றியும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றியும் தனது கருத்துகளை கூறினார். பின்பு தனது சினிமா அனுபவத்தை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

கமல் பேசியதாவது, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷம் சினிமா பார்க்கும் போது இருக்கும். எடுக்கும் போது அவ்ளோ இருக்காது. அதுவும் நான் இருநூறு சினிமாக்கு மேல நடிச்சிருக்கேன். அதில் நான் படம் எடுக்க வரும் போது எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் நிறைய இருக்கு. ஒவ்வொரு முறையும் கண்ணீர் ஓடையைத் தாண்டி தான் வரணும். அதை நான் எப்போதும் மனசுக்குள்ளையே வச்சிப்பேன். ஏன்னா, அந்த வன்மம் எல்லாம் கேட்காமல் ரசிகர்களின் ஆரவாரம் என்னை தூக்கி விட்டு கண்ணீர் துடைத்துவிட்டது. அதுதான் உண்மை. என்னை சுற்றி இருந்தவங்க எனக்கு தெரியாமலையே எனக்கு ரசிகர்களா இருக்காங்க. அவங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது, அதுக்குத்தான் அரசியலுக்கு வந்தேன். நான் சீஃப் மினிஸ்டர் ஆகனும்னுலாம் அரசியலுக்கு வரல. எம்.எல்.ஏ, எம்.பி-லாம் எனக்கு புரியாது. ஒரு எம்.எல்.ஏ. 40 வருஷமா ஒரு தொகுதியில் என்ன பண்ண வேண்டுமோ அதை நாங்க தமிழகத்துக்கு மெதுவா பண்ணியிருக்கோம். ஏன்னா நாங்க தனி மனிதர்கள். என்கூட உழைத்த தம்பிகள் எல்லாம், இன்றைக்கு பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் வளர்ந்து கொண்டிருப்பது எனக்கு பெருமை. அதே போல் எஸ்.டி.ஆர். தம்பிகளும் நடக்க வேண்டும். அதை அவர் செய்ய வேண்டும்.

புதுசா நடிக்கனும்னு நினைக்கிறவங்களை எல்லாம் எனக்கு போட்டின்னு நினைப்பவன் நான். அதே சமயம் அவங்களை வரவேற்பது கடமைன்னும் நினைப்பவன் நான். அந்த கடமையை நாம் அனைவரும் செய்ய வேண்டும். நடுவில் எல்லாத்தையும் விட்டு விட்டு போகலாம் என நினைத்த போது என்னை இங்கு தங்க வைத்ததே நீங்கள் தான். எனக்கு இருக்கும் முனைப்பு அடுத்தடுத்து நிறைய குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதுதான். நான் தோள் கொடுக்கும் இந்த சினிமா பல்லக்கில் திறமையானவர்கள் எல்லாரும் ஏறி அமரலாம். இன்னொரு பக்கம் சாய்ந்தால் அதை பிடிக்க மணி, ரஹ்மான், ரவி கே சந்திரன், நாசர் போன்றோர்கள் இருப்பார். மேலே நிற்கும் குழந்தைகள் நம்ம காலை அவங்க மேல வச்சிருக்கோமே என நினைக்கலாம். அப்படி வைக்கலாம். தப்பே கிடையாது. நம்ம குழந்தைகளுக்கு காலில் முத்தம் கொடுப்போம் அல்லவா. அந்த மாதிரிதான் அதை நினைக்கிறேன்.” என்றார்.

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், நான் இங்கு விற்க வந்தது தக் லைஃப் படத்தை அல்ல. நல்ல சினிமாவை. தக் லைஃபை எதாவது ஒரு விலையில் நீங்கள் வாங்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்தளவு நம்பிக்கை இருக்கிறதென்றால் நான் சாட்டிலைட்டும், நெட் ஃபிளிக்ஸும் தான் விற்றிருக்கிறேன். பாக்கியெல்லாம் நாங்களே விநியோகம் செய்கிறோம். உங்களை நம்பி ஒரு நல்ல சினிமாவை தயாரித்து முதலீடு செய்திருக்கிறோம். உரம் போட்டு உழுதிருக்கிறோம். விவசாயிக்கு இதைத் தவிற ஒன்றும் தெரியாது. எங்கள் விவசாயம் சினிமா விவசாயம். இதில் கார்ப்பரேட் விவசாயம் யாரும் பண்ணாமல் இருப்பதற்கு மணிரத்னம் மாதிரி தோழர்கள் எனக்கு தேவையாக இருக்கிறார்கள்” என்ற அவர் பின்பு பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய, “பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுக்கும் பாம்புகள் நெளித்திருக்கின்றன, ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுற்றப்படுத்துகிறதே மீன், அதை போல நான்” என்றார்.

பின்பு , “நான் பேசுறது எல்லாமே காப்பி அடிச்சதுதான். பள்ளி கூடத்துக்கும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டுக்கும் போகாத பையன் காப்பி அடிக்காம வேரென்ன செய்வான். அப்படி காப்பி அடிச்சு அடிச்சு, சினிமாவுக்காக டாக்டர் பட்டமே கொடுத்துட்டாங்க. என்னை வியப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு, என்னை குழந்தை பருவத்தில் இருந்து தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். அதை எப்படி சொல்வதென்றால் அதை அடுத்த படத்தில் நல்ல சினிமாவை எடுத்து தமிழ் சினிமாவை உயர்த்துவதில் ஒருவனாக இருப்பேன். அதோடு கடை நிலை சினிமா ரசிகனாகவும் இருப்பேன். அப்படி இருப்பதையே விரும்புகிறேன். இந்த தக் லைஃப் படத்தை ஆதரித்தால் அடுத்து நல்ல படத்தை கொடுக்கும் வலு என் கையில் இருக்கும். நான் கட்சி நடத்துவதே என் பணத்தை வைத்துத்தான். சினிமாவுக்கு கொஞ்சம் அரசியலுக்கு கொஞ்சம் என செலவழித்து வருகிறேன். அடுத்த பட அறிவிப்பு தக் லைஃப் வெற்றி பொறுத்தே” என்றார்.

Thug Life ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe