சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

மேடையில் கமல் பேசுகையில், “கல்வியும் அன்பும் ஒரு சேர கிடைப்பதில்லை. ஒன்று அம்மாவிடம் கிடைக்கும். இப்போது அகரத்தில் கிடைக்கிறது. சினிமாவில் தரும் கிரீடம் வேறு. சமூகத்தில் கிடைக்கும் கிரீடம் வேறு. நற்பணி செய்பவர்களுக்கு முக்கீரீடம் தான் கிடைக்க வேண்டும். தண்டி யாத்திரை ஆரம்பித்தாலும் அண்ணா ஆரம்பித்தாலும் முதலில் கொஞ்சம் பேர் தான் இருப்பார்கள். அப்புறம் கூட்டம் பெருகும்.  

சரித்தரகாரர்களுக்கு சினிமா வாசிகள் மறந்துவிடும். ஆனால் சமூகத்தில் பெரியவர்களின் பட்டியலில் சேருவதற்காகத்தான் நானும் 21 வயசில் ஆசைப்பட்டேன். சூர்யாவும் இளமையிலே ஆசைப்பட்டார். அகரத்தில் கற்றவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்புவதாக சொல்வது நதி போன்றது. அது ஒரு நீட்சி. இந்த மேடையில் பார்த்த டாக்டர்கள் அடுத்த வருஷம் பார்க்க முடியாது. இதை நான் சொல்வது, நீண்ட நதி என்ற பார்வையில். அதே சமயம் இன்னொரு காரணமும் இருக்கிறது.

2017லுக்கு பிறகு இந்த நீட்சி தொடர முடியவில்லை. இப்போ புரியுதா ஏன் நீட் வேணாம்னு சொல்றோம்னு. 2017 முதல் இன்றைய தேதி வரை நிறைய மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு காரணம் இந்த சட்டம். அந்த சட்டத்தை மாற்றி எழுத பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்கவல்லது. இது சனாதன, சர்வாதிகார சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஆயுதம். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீங்க. அப்படி எடுத்தால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்து விடும். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல. இது புரிய எனக்கு 70 வயது ஆகிவிட்டது. 

Advertisment

முதலமைச்சருடன் நான் பேசி கொண்டிருந்த போது, என்ஜிஓக்களை பெரிதாக ஆதரிக்க வேண்டும் என சொன்னேன். மேலும் அவர்கள் பண உதவி கேட்பது இல்லை, அனுமதி கேட்கிறார்கள் என்றேன். அதற்கான பணிகள் செய்து வருவதாக பதிலளித்தார். அதில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். ஏனென்றால், இதே திட்டம் சூர்யாவை பார்த்து தான் ஐடியா வந்தது என்றால், அது தப்பில்லை. அது அரசுக்கு ஒன்றும் அவமானம் கிடையாது. நல்லது எதிரியிடம் இருந்தாலும் கேட்டுக் கொள்ளலாம். சூர்யா நம்ம பிள்ளை. இங்கிருந்து எடுக்காமல் வேறு எங்கிருந்து எடுப்பார்கள். அரசு பெரிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதில் எனக்கும், உங்களுக்கும் என எல்லாருக்கும் பங்கு உண்டு. இங்கு நான் பேசுவது கல்வி சம்பந்தம் பட்டது தான். அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல.

எனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்ற சொன்னது சிவக்குமார். எனக்கு சினிமா விழாக்களில் கிடைக்காத சந்தோஷம் இந்த விழாவில் எனக்கு கிடைக்கிறது. அன்பு, கல்வி.. இந்த இரண்டு அயுதத்தை வைத்து உலகத்தை வெல்லலாம். அதற்கான படை இந்த அகரம் மாணவர்கள்.” என்றார்.