
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’, இரண்டாவது பாடலான ‘சுகர் பேபி’ மற்றும் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(24.05.2025) நடக்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் மும்பை, கொச்சி, ஹைதராபாத் என பல்வேறு நகரங்களில் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கேரளா கொச்சியில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நாம் அனைவருமே திராவிடர்கள் எனப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் மலையாளத்தில் பேசலாம். ரொம்ப நேரம் பேசினால் புரியாது. ஆனால் இங்கே புரியும். அதனால் எல்லோரும் பக்கத்து ஸ்டேட்ல இருக்கிற பாஷையை கத்துக்கோங்க. இந்தியை அப்புறம் பார்த்துக்கலாம். எங்க பாஷை முதலில் அழிஞ்சு போய்விடக்கூடாது என்பது தான் எங்களின் கடமை. அதை இந்த ஊரில் வந்து சொல்லும் தில் எப்படி இருக்கு தெரியுமா... நாம் அனைவருமே திராவிடர்கள், மறந்துடாதீங்க” என்றார்.