இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்ததற்காகவும் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ‘மடை திறந்து’, ‘ராக்கம்மா’ என இளையராஜா பாடல்கள் வரிசையாக பாடப்பட்ட நிலையில் ‘16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப் பூவே’ பாடலும் பாடப்பட்டது. இப்பாடலை தமிழ் தெரியாத பாடகி ஒருவர் பாடினார். அவர் பாடி முடித்ததும், மேடைக்கு கீழே இருக்கையில் இருந்த கமல் திடீரென எழுந்து நின்று, “பாடகிக்கு பெரிய கைதட்டல் கொடுங்க. ஏன்னா அவங்களுக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் இசை தெரியும். அதை எல்லாருமே ரசித்து பாராட்ட வேண்டும். நான் எப்போதுமே இளையராஜாவுக்கு பி.அர்.ஓ. அதனாலத்தான் நான் எழுந்துவிட்டேன்” என்றார்.
மேலும் மேடையில் பாடும் பாடல்கள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பட்டியல் எனவும் தெரிவித்தார். இதை கேட்டவுடனே முதல்வர் சிரித்த முகத்தோடு கைகூப்பி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து ‘அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...’, ‘சின்னத்தாயவள்...’, ‘உன்னை நெனச்சி நெனச்சி...’, ‘ஒரு கிளி உருகுது...’, ‘ராஜா கைய வச்சா...’, ‘பொன்வானம் பன்னீர் தூவுது...’, ‘காதலின் தீபம் ஒன்று...’, ‘மாருகோ மாருகோ மாருகையே...’ ஆகிய பாடல்கள் பாடப்பட்டது.