
பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரை சேர்ந்த சோபியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். தமிழில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இவரது தந்தை அரசு பேருந்து நடத்துனராக இருந்துள்ள நிலையில் அம்மாணவிக்கும் அக்குடும்பத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் அம்மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அம்மாணவியிடம் முதலில் வாழ்த்து சொன்ன கமல், தொடர்ந்து, “இது பெரிய சாதனை. அதை தொடர்ந்து பண்ணுங்க. உங்க மேல் பள்ளி படிப்புக்கு நான் உதவி பன்றேன். அதுக்கப்புறம் என்னை வந்து மீட் பன்னுங்க. அடுத்து என்ன படிக்கலாம் என பேசுவோம். கனவை சுருக்கிக்காதீங்க. உங்களுக்கு நல்ல படிப்பு வருது, அதை எதுக்கு சுருக்கனும்.
உங்க மார்க்கை பார்த்தேன். நான் படித்த காலங்களில் இது போன்ற மார்க்கை பார்த்ததில்லை” எனக் கூறினார். உடனே அருகில் இருந்த அந்த மாணவியின் தந்தை கமலின் பாராட்டுக்கு நன்றி கூறினார். அப்போது அவரிடம் பேசிய கமல், “கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக சொல்றாங்க இல்லையா. அதில் உங்க பங்கும் இருக்கு” என்றார். பின்பு அம்மாணவியின் பள்ளி முதல்வரும் கமலிடம் நன்றி தெரிவிக்க அவருக்கும் கமல் வாழ்த்து தெரிவித்தார்.