மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பு வெளியாகியிருந்தது. ஆனால் கால்ஷீட் தொடர்பான பிரச்சனை காரணமாக இருவரும் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக ஒரு அறிமுக வீடியோவை கடந்த மே 9ம் தேதி படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராஜ் கமல், தற்போது கமல்ஹாசன் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் என வீடியோ வெளியிட்டுஅறிவித்துள்ளது.