Advertisment

“சிவ ராஜ்குமார் இவ்வளவு அவமானத்தை சந்திக்க நேர்ந்தது வருத்தம்” - கமல்

kamal letter to karnataka film chamber regards thug life issue

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவின் போது தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்து கர்நாடகாவை கொதி நிலையில் ஆழ்த்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் எந்த மொழியில் இருந்து எது வந்தது என்று மொழி வல்லுநர்கள் சொல்லட்டும் என சொல்லி ‘அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது’ என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

Advertisment

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்தது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் மன்னுப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.

Advertisment

பின்பு கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கமல் கர்நாடக திரைத்துறை சம்மேளன தலைவருக்கு எழுதிய கடிதத்தை நீதிபதி முன் படித்து காட்டினார். பின்பு அதில் என்னுடய (கமல்) பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து வழக்கறிஞர், தீமையாக இருந்தால்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தீமை எதுவும் இல்லை என்றார். தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட விரும்பவில்லை, திரைப்பட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒருவாரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் கர்நாடக வர்த்தக சபை தலைவருக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், “புகழ்பெற்ற ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதையும் மட்டுமே எனது வார்த்தைகள் வெளிப்படுத்தின. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை.

தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எனது வாழ்க்கை முழுவதும், கன்னடம் பேசும் சமூகம் எனக்கு அளித்த அரவணைப்பையும் பாசத்தையும் நான் போற்றி வருகிறேன், இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன். மொழி மீதான எனது அன்பு உண்மையானது, மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த நிலத்தின் அனைத்து மொழிகளுடனும் எனது பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது. நான் எப்போதும் அனைத்து இந்திய மொழிகளின் சமமான கண்ணியத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறேன், மேலும் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்து வருகிறேன், ஏனெனில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை சீர்குலைக்கிறது. நான் சினிமாவின் மொழியை அறிவேன், பேசுகிறேன். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. என் கருத்து நம் அனைவருக்கும் இடையே அந்த பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காக மட்டுமே.

என் மூத்தவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த அன்பையும் பிணைப்பையும்தான் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அந்த அன்பின் பிணைப்பிலிருந்துதான் சிவ ராஜ்குமார் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சிவ ராஜ்குமார் இவ்வளவு அவமானத்தை சந்திக்க நேர்ந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது கருத்தின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் விரும்பியதும் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

karnataka Thug Life ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe