லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்ததற்காகவும் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன், இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா’ எனும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திரைத்துறையில் இருந்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்குகின்றனர். சிறப்பு அம்சமாக இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசை இதிலும் அரங்கேற்றப்படுகிறது. மேலும் லண்டனில் அவரது குறிப்புகளை வாசித்த அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவால் அரங்கேற்றப்படுகிறது.
இந்த நிலையில் விழாவில் முதலில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல் பாடலாக ‘கோயில் புறா’ படத்தில் பி.சுசீலா, உமா ரமணன் பாடிய ‘அமுதே தமிழே அழகிய மொழியே’ பாடல் பாடப்பட்டது. இப்பாடலை தனது இருக்கையிலே இருந்து பாடிய இளையராஜா திடீரென்று தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த கமலுடன் மைக்கை பகிர்ந்து கொண்டு பாடினார். கமலும் இளையராஜாவுடன் சேர்ந்து இப்பாடலை பாடினார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.