Advertisment

"தமிழக முதல்வர் இதைப் பரிசீலிக்க வேண்டும்" - கமல்ஹாசன் அறிக்கை!

vgsgesags

எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை விருதுகள் வழங்கிப் போற்றுவது ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். பண்பாட்டிற்குப் பங்களித்த ஆளுமைகளைக் கவுரவிக்க எண்ணற்ற விருதுகள் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகின்றன. விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல. அதன் பெயர் பரிசு. விருதென்பது தகுதியான ஆளுமையைத் தேடி வரவேண்டிய ஒன்று. கூருணர்வுள்ள எந்தக் கலைஞனும் அமைப்பிற்கு வெளியேதான் தன்னை நிறுத்திக்கொள்வான். எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டான். சிபாரிசுக் கடிதங்களுக்கு அலைவதோ, தன்னுடைய நூல்களைத் தானே வாங்கி அனுப்பி வைப்பதோ, சான்றிதழ்களை இணைப்பதோ அவனைப் பொருத்தவரை கவுரவமான ஒன்றல்ல. அந்த நிமிர்வே ஒரு கலைஞனின் முதன்மையான அடையாளம். விண்ணப்பித்துப் பெறக்கூடிய எந்த விருதும் தன் ஆளுமைக்கு இழுக்கு என்றே எந்த அசலான கலைஞனும் நினைப்பான்.

Advertisment

வயிற்றுப்பாட்டுக்குக் கடன் கேட்கவே நல்ல கலைஞன் யோசிப்பான். கடன் கேட்டு அவமானப்படுவதற்குப் பதிலாகப் பட்டினியே கிடக்கலாம் என நினைப்பான். எனக்குத் தெரிந்த, எனக்குக் கற்பித்த எந்தக் கலைஞனும் விருதுக்கு அலைந்ததில்லை. ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து விண்ணப்பித்து போட்டி போட்டு உறிப்பானை அடிப்பது போல விருதுக்கு விண்ணப்பம் கேட்டால், அசலான கலைஞர்கள் மெளனமாக நகர்ந்துவிடுவார்கள். ஒவ்வொரு விருதுக்கும் தகுதியானவர்களைக் கொண்டு நடுவர் குழு அமைக்கப்பட வேண்டும். விருதிற்குரிய நபர்களைத் தேடிக் கண்டடைவது இந்தக் குழுவின் பொறுப்பு. நடுவர் குழு உறுப்பினர்களின் விபரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். இன்னின்ன தகுதிகளின் அடிப்படையில் இவ்விருதுக்கு இன்னார் தேர்வு செய்யப்பட்டார் என்பதை நடுவர் குழு அறிவிக்க வேண்டும்.

முடிந்தவரை விருதுகளை அக்கலைஞன் வாழும் ஊரில் சென்று விழா எடுத்து வழங்கவேண்டும். அவன் வாழும் சூழலில் அவனுக்குரிய கவனத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்பையும் உருவாக்கியளிப்பதே விருதுகளின் நோக்கமாக இருக்கவேண்டும். பல நல்ல கலைஞர்களை அவர்கள் இருக்கும்போதே கொண்டாடத் தவறிய பழி தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு. தகுதி வாய்ந்த ஒருவர் விருதுகளைப் பெறுவதற்கு முன்னரே இறந்துவிட்டாரெனின், தாமதம் ஆனாலும் அவருக்குரிய கவுரவம் செய்யப்பட வேண்டும். உனக்கு விருது வேண்டுமானால் நீதான் விண்ணப்பிக்க வேண்டும், என்னைத் தேடிவந்து வரிசையில் நின்று பணிந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் ஒருவகையான மன்னராட்சி தொனி இருக்கிறது. இந்த வழக்கத்தை உடனடியாக மாற்றுவதுதான் நல்ல அரசின், நல்ல அரசாட்சியின் செயல். தமிழக முதல்வர் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe