Skip to main content

சர்ச்சையைக் கிளப்பிய 'பதான்' படம் வெளியானது - ஷாருக்கான் குறித்து கமல்ஹாசன் பதிவு

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

kamal hassan about Shah Rukh Khan and his pathaan movie

 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருக்கிறார் என்ற இந்துத்துவர்களின் விமர்சனத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

 

முன்னதாக படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். மேலும் சில இடங்களில் பதான் படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி படத்தின் பேனர்கள், பதாகைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனிடையே அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தேசியக்குழு கூட்டத்தில், இனி திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது.

 

இதையடுத்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பட விவகாரம் குறித்து ஷாருக்கான் யார்? அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனச் செய்தியாளர்களிடம் சொன்னார். பின்பு ஷாருக்கான் தன்னிடம் போனில் பேசியதாகவும், அவருக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என உறுதியளித்ததாகவும் ட்வீட் செய்தார். இது பேசுபொருளான நிலையில், படத்தை எதிர்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியில் உள்ளோம். இதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்”  எனத் தெரிவித்துள்ளனர். 

 

இப்படி ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பை சம்பாதித்த பதான் படம் ஒருவழியாக சொன்ன தேதியில் எந்த தடங்கலும் இன்றி இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களே இருந்து வரும் நிலையில், ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து மூன்று ஆண்டுகள் கழித்து படம் வெளியாகியுள்ளதால், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பதான் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகக் கேட்கின்றேன். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது பிரதர்" எனக் குறிப்பிட்டு ஷாருக்கானை வாழ்த்தியுள்ளார். ஷாருக்கானும் கமலும் 'ஹே ராம்' படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவரும் நல்ல நட்போடு பழகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.