/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/115_8.jpg)
பிரபல திரைப்பட இயக்குநரான ஜி.என்.ரங்கராஜன் மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 91. இவர், கல்யாண ராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். ஜி.என்.ரங்கராஜன் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் சினிமாவில் நுழைந்த காலம்தொட்டு இறக்கும் தருவாய்வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இன்றும் விரும்பி பார்க்கப்படும் பல திரைப்படங்களை தமிழர்களுக்கு தந்தார். அவரது நீட்சியாக மகன் குமரவேலன் சினிமாவில் தொடர்கிறார்.
கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல்மீன்கள், எல்லாம் இன்பமயம், மகராசன் என என்னை வைத்து பல வெற்றிப்படங்களைத் தந்தவர். என்மீது கொண்ட மாறாத அன்பால் தான் கட்டிய வீட்டிற்கு கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயது இருக்கக்கூடும். ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லை என்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்று எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள்.சினிமாவில் மட்டுமல்ல மக்கள் பணியிலும் என்னை வாழ்த்திய அவர் எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர்.
சில நாட்களுக்கு முன்புகூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும். கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார் என கேள்விப்பட்டேன். தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர். நிபந்தனையற்ற தூய பேரன்பினை பொழிந்த ஒர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணிக்கும் தம்பி ஜி.என்.ஆர் குமரவேலன் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)