
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், 28 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரவிருக்கிறது. இப்படம், இந்தியன் 3 ஆகவும் மூன்றாம் பாகமாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரைலர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா தொடர்பாக, நேற்று காலை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய கமல்ஹாசன், “ இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததற்கு கருவை இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால், ஊழல் இன்னும் அதிகம் ஆனதால்தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் என்னுடன் நடித்த நல்ல நடிகர்களான் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இப்போது இல்லையென்றாலும் அவர்களை பெருமைப்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன.
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, இந்தியன் 2 ஒரு உதாரணம். ஷங்கர் என்ற இளைஞர், நல்லவேளையாக இன்னும் இளைஞராகவே இருக்கிறார். நல்லவேளையாக நான் தாத்தாவாகி விட்டதால் வித்தியாசம் தெரியவில்லை. இந்த மாதிரி மேடைகளில் இரண்டு பேர் சண்டை போட்டு கொள்வார்கள். மாற்றுக்கருத்து இருக்கும். அது போல், ஷங்கரும் கமல்ஹாசனும் இனிமேல் நினைச்சாலே இந்த மாதிரி படம் எடுக்க முடியாது என்று ரவிவர்மன் சொன்னார். ஆனால், எடுத்து இருக்கிறோம். அதுதான் இந்தியன் 3. ஆனால், இந்த மேடையில் அந்த படத்தை பற்றி பேசக்கூடாது. இந்தியன் 4, இந்தியன் 5 வருமா என்று கேட்கிறார்கள். அதை கேட்கும் போது பதற்றமாக இருக்கிறது. இந்தியன் 2 மற்றும் அடுத்து வரும் பாகத்தை பார்த்துவிட்டு வெற்றி பெறச் செய்யுங்கள். அதற்கு மேல், தெம்பும், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதெல்லாம் நடக்கலாம்” எனப் பேசினார்.