
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2.0 படம் வெளியாகி கடந்த ஆண்டு இந்திய சினிமாவிற்கென மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று கொடுத்திருக்கிறது. இந்த படம் 700 கோடி கிளப்பில் சேர்ந்துள்ள முதல் தமிழ் படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஷங்கர் அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார், என்ன படம் இயக்கப்போகிறார் என்பது கசிந்த தகவல்களாகவே இருந்து வந்தது. பிறகு கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 இயக்கப்போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானாலும், கமல் அரசியலில் பிஸியாக இருப்பதனால் இந்த படம் ட்ராப் ஆகும் சூழ்நிலையில் இருப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், படம் ஜனவரி மாதம் 18ஆம் தேதி தொடங்கப்படும் என்று படக்குழு அறிவித்தது. நேற்று படத்தின் பல போஸ்டர்களை வெளியிட்டது இந்தப் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம். இந்தியன் தாத்தா வேடத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு மிரட்டலான லுக்கில் இருக்கிறார் கமல். மேலும் இந்த போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வ சில தகவல்களும் வெளி வந்துள்ளது என்றும் சொல்லலாம். பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஜெயமோஹன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.