kamal explianed kannada language issue going on regarda his speech in thug life audio launch

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோட் செய்யும் பணிகளில் கடந்த சில வாரங்களாக படு பிஸியாக இருக்கின்றனர்.

Advertisment

அந்த வகையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். இவர் குறித்து மேடையில் பேசிய கமல், என் மகனாகவும் ரசிகனாகவும் சிவ ராஜ்குமார் வந்திருப்பதாக சொன்னார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது நினைவுகளை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு இருக்கிறார். அதனால்தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார். அதாவது தமிழில் இருந்து தான் கன்னடம் மொழி உருவானது என்று கமல் சொன்னது தற்போது கர்நாடகாவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது.

Advertisment

கன்னட மொழியை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, கன்னட சலுவளி வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டல் வெடிக்கும், அவரது படங்கள் எங்கு ஓடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதோடு பெங்களூருவில் தக் லைஃப் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்காக வாழ்த்தி வைத்திருந்த ரசிகர்களின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து, கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இவர்களை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என தனது கண்டனத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் பதிவு செய்திருந்தார். அதோடு கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமல் மன்னிபு கேட்க வில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்படும் என்று எச்சரிந்தார்.

இந்த பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். கேரளாவில் தக் லைஃப் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் முன்பு பேசிய அவர், “இந்த சர்ச்சைகளை மக்கள் பார்த்து கொள்வார்கள். அரசியல்வாதிகள் மொழிகளை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள். அவர்களுக்கு மொழி தொடர்பாக போதுமான அறிவு இருக்காது. இது என்னையும் உள்ளடக்கியதுதான். அதனால் இது குறித்த ஆழமான விவாதங்களை விட்டு விடலாம். நான் அன்பின் மிகுதியில் சிவராஜ்குமார் குறித்து கூறினேன். அவரது தந்தை எனக்கும் தந்தை தான். நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

Advertisment

வடக்கில் இருந்து அவர்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் சொல்வதுதான் சரி என தோன்றும். அதுவே தென்குமரியில் இருந்து பார்த்தால் நான் சொல்வது சரி என தோன்றும். இதற்கு மூன்றாவது பார்வையும் உண்டு. மொழியியல் அறிஞர்கள், வல்லுநர்கள் சொல்வது. அவர்கள் தான் எது சரி என்று சொல்ல வேண்டும். இது பதில் கிடையாது, விளக்கம். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது” என்றார்.