தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். கடைசியாக இருவரும் ‘அல்லாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் நடித்திருந்தனர். இப்படம் 1979ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் அடுத்தக் கட்டத்திற்கு நகராமல் போனது. இந்த நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் கமல் துபாயில் நடந்த சைமா விருது விழாவில் ரஜினியுடன் இணையும் படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நாங்க இணைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு, விரும்பி பிரிஞ்சு இருந்தோம். ஏன்னா, ஒரு பிஸ்கெட்ட பிரிச்சு ரெண்டு பேருக்கு கொடுத்துட்டு இருந்தாங்க, ஆளுக்கொரு பிஸ்கெட் வேணும்னு ஆசைப்படோம், அதை வாங்கி நல்லா சப்பிட்டோம், இப்போ மறுபடியும் அரை பிஸ்கெட் போதும்னு நினைக்குறோம். அதனால் ஒன்றாக வருகிறோம். எங்களுக்குள்ள போட்டி என்பது நீங்க ஏற்படுத்தினது தான், ஆனா எங்களுக்கு அது போட்டியே கிடையாது.
எங்களுக்கு சான்ஸ் கிடைச்சதே பெரிய விஷயம். அப்போவே முடிவு பண்ணிட்டோம், இரண்டு பேரும் முன்னுதாரணமாக இப்டிதான் இருக்கணும்னு, அது படியே தான் இரண்டு பேரும் இருக்கோம். அதனால் நாங்க சேருவது வியாபார ரீதியா ஆச்சரியமாக இருக்கலாமே தவிர எங்களுக்கு இல்லை. எப்போவே நடக்க வேண்டியது இப்பவாச்சும் நடக்குதே என்ற நிலைதான் எங்களுக்கு இருக்கிறது” என்றார். இதனால் ரஜினி - கமல் உள்ளிட்ட சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.