
பிரபல நடிகர் டி.எஸ். பாலையாவின் மகனும், நடிகருமான ஜூனியர் பாலையா (எ) ரகு பாலையா தமிழில் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சுரப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜூனியர் பாலையா.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த ஜூனியர் பாலையா(70) இன்று மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக அடிக்கடி மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இரங்கல் பதிவில், "பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.