kamal condolence paapaammaal passed away

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் என்ற பாப்பம்மாள்(108) , இயற்கை விவசாயத்தில் இவரின் பங்களிப்பு பெரிதும் இருந்ததால் மத்திய அரசு இவரை

கௌரவித்து கடந்த 2021ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் இவருக்கு பெரியார் விருது வழங்கி கெளரவித்தார்.

இதையடுத்து வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த பாப்பம்மாள் நேற்று(27.09.2024) இரவு காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், பாப்பம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன. அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாளுக்கு என் அஞ்சலி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.