/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/101_38.jpg)
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/105_38.jpg)
திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து பலரது பாராட்டை டேனியல் பாலாஜி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே மோகன் ராஜா, “திரைப்படக் கல்லூரியில் சேர தனக்கு உந்துதலாக இருந்தவர் டேனியல் பாலாஜி. சிறந்த நண்பர். அவருடன் வேலை செய்வதை மிஸ் செய்வேன்” என பதிவிட்டுள்ளார். இதனிடையே விஜய் சேதுபதி டேனியல் பாலாஜி உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)