
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலாக முன்பு வெளியான ‘ஜிங்குச்சா’ மற்றும் அண்மையில் வெளியான ட்ரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி நடக்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கமல், மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கமல், திரையரங்க வெளியீட்டுக்கு பின் 8 வாரங்கள் கழித்தே தக் லைஃப் படம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என பதிலளித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இது ஒரு பரிசோதனை முயற்சி கூட அல்ல, ஒரு நடைமுறைக்கான விஷயம். ஓ.டி.டி. நிறுவனம் இதை ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இருவரும் அமர்ந்து பேசினோம். அது பேச்சு வார்த்தை அல்ல, அது ஒரு திட்டம். இது போல் மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம். இது சினிமா துறைக்கு ஒரு ஆரோக்கியமான விஷயம். இதைச் செய்த முதல் நபர் நாங்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
இப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஓ.டி.டி. வெளியீடு பொறுத்தவரை ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓ.டி.டி.யில் வெளியாகி வருவது இப்போது நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.