
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் கமல், படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பற்றியும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றியும் தனது கருத்துகளை கூறினார்.
அந்த வகையில் சிம்பு பார்த்து அவரைப் பற்றி பேசுகையில், “தம்பி எஸ்.டி.ஆர். போகும் தூரம் எனக்கு தெரிகிறது. உங்களுக்கு புரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்த கூட்டத்தை வழி நடத்தும் தலைவன் நீங்கள். அந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அதன்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே அப்படி தான் இருக்கிறீர்கள். இருப்பினும் அது கூடியிருக்கிறது. அது சுமை இல்லை சுகம். அதை அனுபவீங்க. உங்களை பார்த்து நானும் அனுபவிப்பேன்” என்றார்.