ADVERTISEMENT

“வெல்லுவான் புகழ் அள்ளுவான்” - ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்  

03:22 PM Jan 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளவந்தான் படம் 12 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அவரது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பான போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் "வெல்லுவான் புகழ் அள்ளுவான்" எனக் குறிப்பிட்டு விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகும் எனப் பகிர்ந்துள்ளார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் அவ்வப்போது புதிய நவீன தொழில் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றி ரீ ரிலீசாகிறது. அந்த வகையில் ரஜினியின் 'பாபா' படம் கடந்த மாதம் வெளியானது. இது பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது கமலின் ஆளவந்தான் படம் வெளியாகவுள்ள செய்தி கமல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT