Advertisment

உதவியாளரிடம் கோபத்தைக் காட்டிய தேவர்; நிலைமையை சூசகமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்!

Kalaignanam

Advertisment

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்பத்தேவருடனான தன்னுடைய அனுபவம் குறித்தும் தேவரின் தொழில் நேர்த்தி குறித்தும் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

சாண்டோ சின்னப்பத்தேவர் தயாரிப்பில் இயக்குநர் திருமுகம் இயக்கிய படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகே நடைபெற்றது. கணக்கு வழக்குகளில் தேவர் மிகவும் கண்டிப்போடு இருப்பார். முந்தையநாளின் செலவு விவரங்கள் மறுநாள் காலை அவர் மேசையில் இருக்கவேண்டும். அதைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலையை ஆரம்பிப்பார். ஒருநாள், அப்படி கணக்குப் பார்த்துக்கொண்டு இருக்கையில், மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு ஸ்பெஷல் சாப்பாடு வாங்கியதாகக் கணக்கு எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் 70 காலகட்டங்களில் நடந்தது. அந்தக் காலத்தில் மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு சாப்பாடு என்றால் 10 பேர் சாப்பிடலாம். அதை ஒரு ஸ்பெஷல் சாப்பாடு கணக்கில் எழுதியிருந்ததால் தேவருக்குச் சந்தேகம். உடனே ப்ரொடக்ஷன் பாய் சுப்பையாவை அழைத்து இந்த சாப்பாடை எந்த ஓட்டலில் வாங்கினாய் என்று விசாரித்தார். அவர் உடுப்பி ஓட்டலில் வாங்கியதாகக் கூறினார். உடனே தேவர் அந்த ஓட்டலுக்கு போன் போடச் சொன்னார்.ஃபோன் செய்து விசாரித்ததில் அங்கு ஸ்பெஷல் சாப்பாடு கிடையாது எனக் கூறினார்கள். உடனே சுப்பையா, பக்கத்துக்கு தெருவில் ஸ்ரீ உடுப்பி என்று ஒரு ஓட்டல் உள்ளது. அங்குதான் நான் வாங்கினேன் எனக் கூறியுள்ளார். இதை முதலிலேயே சொல்லக்கூடாத என சுப்பையாவை திட்டிக்கொண்டே, செங்கல்பட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு தேவர் ஃபோன் செய்தார். அந்தக் காலத்தில் தேவர் முதலமைச்சர் மாதிரி. அவரைத் தெரியாத ஆட்களே கிடையாது; அவர்மீது எல்லோரும் மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள்.

அஞ்சல் அலுவலகத்திற்கு ஃபோன் செய்த தேவர், ஸ்ரீ உடுப்பி ஓட்டலில் இருந்து ஆட்களை அழைத்துவரும்படி கூறினார். உடனே ஒருவர் போய் அந்த ஓட்டலில் இருந்து ஒருவரை அழைத்துவருகிறார். அவரிடம் ஃபோனை கொடுக்க, அவர் பேச ஆரம்பிப்பதற்குள் ஐயா என்னை மன்னிச்சிருங்க... நான்தான் ஐம்பது காசு திருடிட்டேன் எனக் கூறி தேவர் காலில் விழுந்துவிடுகிறார் சுப்பையா. அயோக்கியப்பயலே என ஆரம்பித்து தேவர் வாயிலிருந்து வராத கெட்ட வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு கோபத்தில் கொந்தளித்துவிட்டார். இதைக் கேட்கும்போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே... காசையும் திருடிவிட்டு என் நேரத்தையும் வீணாக்குறியா எனத் திட்டி அவனை வேலையை விட்டு அனுப்பிவிடுகிறார்.

Advertisment

sando chinnappa devar

30 நாட்கள் கடந்திருக்கும். திடீரென ஒருநாள் கல்யாண பத்திரிகையுடன் தேவரைப் பார்க்க சுப்பையா வருகிறார். கல்யாணப் பத்திரிகையுடன் வந்த காரணத்தினால் அவரை உள்ளே வரச் சொல்கிறார். சுப்பையா உள்ளே வருகிறார். ஏன்டா திருட்டு நாயே உனக்கெல்லாம் எவன்டா பொண்ணு தாரான் எனத் தேவர் கேட்க, தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று சுப்பையா கூறுகிறார். பின் அவரது குடும்பம் பற்றி விசாரித்த தேவருக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. காரணம் சுப்பையாவிற்கு அம்மா, அப்பா என்று யாருமே இல்லை. இவர்தான் தனி ஆளாக இருந்து தங்கையை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இந்த விஷயம் தேவருக்கு தெரிந்ததும், நம்மிடம் ஐம்பது காசு திருடியதும் தங்கைக்காகத்தான் திருடியிருப்பான்... அவனை போய் வேலையை விட்டு அனுப்பிவிட்டோமே எனத் தேவர் மனம் வருந்தினார். எவ்வளவுடா கல்யாணத்திற்கு செலவாகும் எனத் தேவர் கேட்க, வடபழனி கோயிலில்தான் திருமணம்... ஐயாயிரம் பணம் கிடைத்தால் கல்யாணத்தை நல்லபடியாக நடத்திவிடுவேன். தங்கைக்கு கல்யாணமாகிவிட்டால் அதன்பிறகு, எங்காவது சென்று நான் பிழைத்துக்கொள்வேன் எனக் கூறியுள்ளார். உடனடியாக ஐயாயிரம் பணத்தை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் நான் நேரில் வந்து வாழ்த்துவதாகவும் கூறினார். நான் அங்குதான் அருகே அமர்ந்திருந்தேன். என்னை ஒரு பார்வை பார்த்த தேவர், என்னடா ஞானம் ஐம்பது பைசாவுக்காக ஒரு மாசத்திற்கு முன்னால் வேலையை விட்டு நிறுத்திய ஒருவனுக்கு இன்று ஐயாயிரம் பணம் கொடுத்து உதவுறானேன்னு யோசிக்கிறியா எனக் கேட்டார். நான் எதுவும் பதில் சொல்லவில்லை. உடனே அவர், அன்னைக்கு அவன் திருடியது வியாபாரத்து பணத்தில். அதை கண்டிப்பது நியாயம். இன்னைக்கு ஐயாயிரம் பணம் கொடுத்ததுகிடைத்த லாபத்தில். இது தர்மம். வியாபாரத்தில் அப்படி கண்டிப்போடு இருந்தால்தான் பணம் சம்பாரித்து இப்படியெல்லாம் தர்மம் செய்ய முடியும் என்றார். சின்ன ஓட்டை பெரிய கப்பலையே கவிழ்த்துவிடும் என்பார்கள். இந்தப் பழமொழியை தேவர் மிகக்கவனமாக கடைப்பிடிப்பார்.

பண விஷயம் மட்டுமல்ல... சினிமா எடுப்பதையே அவர் தொழில்பக்தியுடன்தான் அணுகினார். எல்லாவற்றிலும் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பார். மற்றவர்களும் அதேபோல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார். தேவர் படக்கம்பெனில வேலை என்றால் அனைவரும் சரியாக நடந்துகொள்வார்கள். எல்லா வேலைகளும் திட்டமிட்ட மாதிரி நடக்கும். இன்றைய ஷூட்டிங்கில் முதல் ஷாட் எடுத்துவிட்டோம் என்று காலையில் 9 மணிக்கு அவருக்கு ஃபோன் வரணும். அந்த ஃபோன் வந்த பிறகுதான் கதை விவாதம் உள்ளிட்ட மற்ற வேளைகளில் உட்காருவார். காலையில் அப்படி ஃபோன் வராவிட்டால் கண்டபடி திட்டுவார்.

mgr

அன்று ஒருநாள் 9 மணிக்கு ஃபோன் அடிக்கிறது. ஃபோனை எடுத்த தேவர், என்னடா முதல் ஷாட் எடுத்தாச்சா எனக் கேட்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து பேசியவர், இன்னும் எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கிற்கு வரவில்லை எனக் கூறினார். அதைக் கேட்டு கடுப்பான தேவர், எங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு நேரே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போனார். எம்.ஜி.ஆர். வராததால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருந்தது. படப்பிடிப்பிற்கு உரிய நேரத்திற்கு வராத காரணத்தால் சில நடிகர்களைப் படத்தில் இருந்தெல்லாம் நீக்கியுள்ளார். நான் பணம் சரியாக கொடுத்துவிடுகிறேன்; அதேபோல நீங்களும் சரியாக வந்து நடிக்கவேண்டும் என்பார். ஒரு அரைமணிநேரம் கழித்து எம்.ஜி.ஆர் வருகிறார். வேறு ஏதாவது நடிகராக இருந்தால் தேவர் நேரடியாக சென்று கண்டித்துவிடுவார். எம்.ஜி.ஆர் ஆரம்பக்காலத்திலிருந்தே நண்பர் என்பதால் அங்கிருந்த ப்ரொடக்ஷன் பாயை அழைத்து, ஏன்டா அயோக்கியப்பயலே... அந்தக் கடையில் டீ வாங்காதடான்னு சொன்ன கேட்குறீயா... என அவனைப் போட்டு அடிக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நிலைமை புரிந்துவிட்டது. உடனே தேவரைத் தடுத்த எம்.ஜி.ஆர், விடுங்கண்ணே... நாளைல இருந்து சரியான நேரத்திற்கு நான் வந்துவிடுகிறேன் என்றார். பிற தயாரிப்பாளரின் படமாக இருந்தால் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எம்.ஜி.ஆரை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். எனக்கு மனசு சரியில்லை... இன்னைக்கு ஷூட்டிங் வேண்டாம் என்று வீட்டில் இருந்தே பல நாட்கள் ஷூட்டிங்கை ரத்து செய்திருக்கிறார். ஆனால், தேவரிடம் அதுவெல்லாம் எடுபடாது. எம்.ஜி.ஆரென்ன கடவுளாகவே இருந்தாலும் கொடுத்த கால்ஷீட்படி நடித்துக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார் தேவர்.

kalaignanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe