Skip to main content

"படம் நல்லாதான் இருக்கு, இவர் நடிச்சா ஓடுமா?" - நடிகர் பரத்தை புண்படுத்திய வார்த்தைகள் 

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பரத், தற்போது காளிதாஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் இதற்கு படக்குழு சக்சஸ் மீட் வைத்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பரத், “வெற்றி நாயகன் என்கிற வார்த்தை கேட்டு பல நாட்களாகிவிட்டது. முதலில் நான் ஒரு பெரு மூச்சு விட்டுக்கொள்கிறேன். நேற்று பாம்பேவில் ஒரு ஷூட்டில் இருந்தேன். அப்போது ஒரு கால் வந்தது, நாளைக்கு சக்சஸ் மீட் என்று. முதலில் அதற்காக எதாவது ரெடி செய்துகொண்டு பேசலாமா என நினைத்தேன். அதன்பின் மைக்கு முன்பு முழுவதையும் பேசி சிம்பத்தி நான் உருவாக்குகிறேன் என்று நீங்கள் யாரும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசிவிடலாம் என்று தொடங்கினேன் ஆனால் எமோஷனாக இருக்கிறது. தற்போது எனக்கு எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. ஏனென்றால் 2019 முடிந்து 2020 தொடங்கினால் சினிமாவிற்குள் நான் நுழைந்து 18 வருடங்கள் ஆகிறது. இது ஒரு கரடு முரடான பயணம். 
 

barath

 

 

எனக்கு கொஞ்சம் எமோஷனல் ஆகிறது. நான் எப்போதுமே நல்ல படங்கள் கொடுக்கத்தான் முயற்சி செய்திருக்கிறேன். அதில் கொஞ்சம் தவறுகளும் செய்திருக்கிறேன். அது அனைத்து ஹீரோக்களுக்கும் நடக்கும் ஒன்றுதான். நாம் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்போம், திடீர் என இரண்டு படங்கள் ஓடாது உடனடியாக இவனுக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஆமாம், சினிமா என்பது காசு சம்மந்தப்பட்டது என்பதால் அதை அனைத்தையும் நாங்கள் ஃபேஸ் செய்துதான் ஆக வேண்டும். அதன்பிறகு எப்படி விழுந்து, எந்திருத்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.  ‘அந்த பையன் நல்லாதான்பா நடித்திருக்கிறான் ஆனால் படம் என்னவோ தெரியல சரியா ஓடல’ என்று பத்திரிகை நண்பர்கள் எப்போதும் எனக்கு சப்போர்ட் செய்திருக்கிறார்கள். 
 

hero


ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் நான் தனியாக சந்திக்கும்போது செய்தியாளர்கள், “தம்பி நீ நல்லாதான் நடிச்சிருக்க, ரொம்ப திறமையான பையன், நல்லா டான்ஸ் ஆடுறார் நல்லா ஃபைட் பண்றார் ஆனால் என்னமோ தெரியல்” என்று சொல்வார்கள். அப்படிதான் என்னோட சினிமா பயணம் ஒரு மாதிரியாக போய்க்கொண்டே இருந்தது. இருந்தாலும் நான் என் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டு இருந்தேன். என்னைக்காவது ஒரு நாள் அமையும், இது அமையும் என்று உறுதியாக இருந்தேன். என்னமோ தெரியல இந்த படத்தின் இயக்குனர் 2017ல் என்னிடம் கதை சொல்லும்போது, நான் ஒரு நல்ல படம் பண்ண போகிறேன் என்கிற நம்பிக்கை அப்போதே வந்துவிட்டது. இந்த படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டோம், அதன்பின் படத்தை முடித்துவிட்டு எட்டு மாதங்கள் பல போராட்டங்களுக்கு பின்னர்தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. 
 

dabang


எடிட்டர் வீட்டில் பலமுறை இந்த படத்தின் கட் பார்த்திருக்கிறோம். அங்கிருக்கும் நான்கு சுவர்களுக்குதான் தெரியும் எங்களுக்குள் இருக்கின்ற மன உளச்சல், குமுறல்கள் இதை எப்படி போய் மக்களிடம் சேர்ப்பது என்று. இயக்குனர் சொன்னதுபோல இந்த படம் ரிலீஸாகும் முன்னே சினிமாத்துறையிலுள்ள பலரும் பார்த்துவிட்டனர். இயக்குனர் பட்டும் படாமல் சொல்லிவிட்டார் ஆனால் நான் வெளிப்படையாக சொல்கிறேன்,  ‘எல்லாம் நல்லா இருக்கு, ஆனால் இவரை வைத்து இவ்வளவு பிசினஸ் பண்ண முடியுமா, இவரு நடிச்சா ஓடுமா?’ என்று கேட்பார்கள். அதை இயக்குனர் டிப்ளோமேட்டிக்கா என்னிடம் தெரிவிப்பார். அவருக்கு தன்னுடைய ஹீரோ இதனால் புண்பட்டுவிட கூடாது என்று நினைப்பார். ஆனால் எனக்கு உண்மை நிலவரம் என்னவென்று தெரியும். என் காதிற்கே வரும் இதுபோல செய்திகள். நான் அதை அப்படியே எடுத்துப்பேன் வருத்தப்பட்டு பிரயோஜனம் கிடையாது. எனக்கு நடிக்கதான் தெரியும், மற்றபடி நான் சினிமாவை படிக்கவில்லை. இதை நம்பி பதினாறு வயதிலேயே வந்துவிட்டேன். இதை மட்டும்தான் நம்பி படம் செய்கிறேன், இனியும் நடிப்பேன் அது வேறு விஷயம்” என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க