Skip to main content

“விஜய் சார் சொன்ன, டயலாக் தான் ஞாபகம் வருகிறது” - காளிதாஸ் ஜெயராம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

kalidas jayaram speech at Aval Peyar Rajni movie Trailer Launch

 

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். 

 

லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் ஆனால் மாநகரம் செய்யும் போது சின்னப்பட்டமாகத் தான் இருந்தது. சின்ன படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்றாலும், ஒரு போன் காலில், ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறைய கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச் சிறந்த நடிகர். இந்தப் படம் டிரெய்லரே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

 

காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது, “விஜய் சார் சொன்ன, வாழ்க்கை ஒரு வட்டம் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கைபிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குநர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும் ஆனால் உண்மையிலேயே இந்தப் படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி” என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவர்களின் ஈகோ சண்டை ரசிக்க வைத்ததா? - ‘போர்’ விமர்சனம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Por movie Review

இயக்குனர் மணிரத்னம் உதவியாளர் பிஜாய் நம்பியார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் போர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது?

சிறுவயதில் பள்ளியில் நண்பர்களாக இருக்கும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஆகியோர் பின்னாளில் எதிரிகளாக மாறுகிறார்கள். கல்லூரியில் சீனியர் மாணவராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ். அதே கல்லூரியில் ஜூனியர் மாணவராக வந்து சேரும் காளிதாஸ் அர்ஜுன் தாஸை பழி வாங்க துடிக்கிறார். இதனால் சீனியர் கேங்குக்கும் ஜூனியர் கேங்குக்கும் முட்டல் ஏற்படுகிறது. இந்த சண்டை போக போக, ஈகோ மோதலாக மாறி இதற்கு இடையே வரும் காதல், நட்பு, துரோகம் என பிரச்சனை பெரிதாகி கடைசியில் ஒரு போராக மாறுகிறது. இந்தப் போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே இப்படத்தின் மீதி கதை.

கல்லூரியில் இருக்கும் மாணவர்களின் நட்பு, காதல், துரோகம், சண்டை என அனைத்து விதமான உணர்ச்சிகளை வைத்து படம் உருவாக்கி இருக்கும் பிஜாய் நம்பியார் அதை தன் சிறப்பான மேக்கிங் மூலம் உலகத்தரம் வாய்ந்த படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் மேக்கிங்கில் அதிக கவனம் செலுத்தி இருக்கும் அவர் ஏனோ திரைக்கதையில் சற்றே கோட்டை விட்டு இருக்கிறார். முழு படத்தையும் ஈகோ சண்டையை வைத்து நகர்த்தி இருக்கும் இயக்குநர் அதை இன்னும் கூட ரசிக்கும் படி கொடுத்திருக்கலாம். ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் அவர் திரைக்கதையிலும் அதே மெனக்கடலை கொடுத்து படத்தை உருவாக்கி இருந்தால், இன்னமும் கூட சிறப்பாக அமைந்திருக்கும். கூடவே கல்லூரியில் மாணவர்கள் படிக்கும்படியான காட்சிகளை காட்டிலும் போதைப்பொருள் பயன்பாடு, சண்டை, வன்முறை போன்ற காட்சிகள் படத்தில் அதிகம் வருவதும் சற்றே அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. மற்றபடி படத்தில் நடித்த நடிகர்களின் பங்களிப்பு படத்தின் மேக்கிங் ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

சீனியர் மாணவராக வரும் அர்ஜுன் தாஸ் படம் முழுவதும் மாஸ் காட்டி இருக்கிறார். அவருக்கு என தனி கூட்டம் அமைத்து அதற்கு நடுவே ராஜா போல் வலம் வருகிறார். மாணவராக இவர் நடிக்கும் நடிப்பை விட, லீடராக நடித்திருக்கும் நடிப்பு நன்றாக இருக்கிறது. பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். சின்ன சின்ன முக பாவனைகள் கூட எரிச்சல் ஊட்டும் படி கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். நாயகிகள் சஞ்சனா நடராஜன் டி ஜே பானு ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். சீனியர் மாணவியாக வரும் சஞ்சனா நடராஜன் கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கிறார். முன்னாள் மாணவியாக வரும் டி ஜே பானு அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்து இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த மற்ற மாணவ மாணவியர் மற்றும் நடிகர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

ஜிம்சி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிஸோசா ஆகியோரது ஒளிப்பதிவில் படம் உலகத்தரம். கல்லூரி சம்பந்தப்பட்ட ஃபெஸ்டிவல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரக் காட்சிகள் தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சச்சிதானந்த சங்கரநாராயணன், ஹரிஷ் வெங்கட், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. படத்தின் இறுதியில் வரும் இளையராஜா பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது.

படம் முழுவதும் வெறும் ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து அதனுள் காதல், நட்பு, சோகம், வெறுப்பு, சண்டை என பல்வேறு உணர்ச்சிகளை கலந்து கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதை இன்னமும் கூட சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.

போர் - சற்றே போர்

Next Story

கேங்கில் இணைந்த 2 நடிகர்கள் - ராயனாக தனுஷ்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
dhanush 50 first look update title as raayan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதைத் தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் தனுஷின் 50வது படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மூன்று பேரும் இடம்பெற்றிருக்கின்றனர். மூன்று பேரும் கையில் ஆயுதங்களோடு கோபமாக நின்றுகொண்டிருக்கின்றனர். 

மேலும் ரத்தக் கறையோடு காணப்படுகின்றனர். இப்படத்திற்கு ‘ராயன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தனுஷ் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.